கையில் பொக்கேவுடன் வந்தார் குறிச்சியார். ‘‘கையில் என்ன பொக்கே… உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க கிளம்பிவிட்டீரோ?’’ – என கிண்டலுடன் முந்திரி அல்வாவை நீட்டினோம். புன்முறுவலுடன் அல்வாவைச் சுவைத்த குறிச்சியார்.
இருக்காதா பின்னே… கோவையில் 10 தொகுதியிலும் அ.தி.மு.கவே வெற்றி பெற்ற நிலையில் ஊராட்சியில் தி.மு.க வெற்றி பெற்று இருப்பது பாராட்ட வேண்டியதுதானே. கோவை தி.மு.கவினரிடையே இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாம்.
”ஓ” எப்படியோ ஒற்றுமையா இருந்தா சரி
இரு..இரு… முழுவதும் சொல்லி முடித்து விடுகிறேன். ”தி.மு.க வெற்றி பெற்றது முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்களாலும், செயல்பாட்டினாலும்தான்” என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால் இன்னமும் கொங்கு மண்டலத்தில் தி.மு.கவினரிடையே புகைச்சல் இல்லாமல் இல்லை. கடந்த சில நாட்களாகவே கோவை பொறுப்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று பலரும் கூறி வரும் நிலையில், இதனால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் தங்கள் ஆதரவாளர்களை வைத்து தேவையற்ற வதந்திகளை கிளப்பி விடுகின்றனராம்.

”என்ன சொல்றீங்க”
தான் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டால் கோவையில் கட்சி இன்னும் பலவீனமாகப்பட வேண்டும் என்று நோக்கத்தில் செயல்படுகிறாராம் ஒருவர். தி.மு.கவில் காசு கொடுத்தால்தான் எதுவும் நடக்கும் என்ற தோற்றத்தை கிளப்பி வருகிறாராம் அவர். இதற்காக தற்போது யார் பொறுப்புக்கு வருவார் என்ற யூகத்தில் அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தனது ஆதரவாளர்கள் மூலம் பரப்பி வருகிறாராம். இதற்காக அவர்களுக்கு தனிகவனிப்பு நடக்கிறதாம். மேலும் தானே பொறுப்பில் நீடிக்கப்பட்டால் கல்குவாரி, கனிமவள கொள்ளையில் பங்கு கொடுப்பதாக வாக்குறுதி தருகிறாராம்.
ஓ…அப்ப ஒற்றுமையாவே இருக்க மாட்டாங்களா
ஏன் இல்லாமல், இருபெரும் முக்கிய தி.மு.கவினர் குடும்பங்களிடையே திருமணம் முடிவாகியுள்ளதாம். சமீபத்தில் தி.மு.கவில் மையம் கொண்ட பொள்ளாச்சிக்காரர் மகனுக்கும், அழகான வேட்பாளர் என இளைய தலைவரால் பாராட்டப்பட்டவர் மகளும் விரைவில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
”வாழ்த்துகள் சொல்லிடுங்க”…. அ.தி.மு.கவின் பொன்விழா பற்றி

ஆமாம், `அண்ணா தி.மு.க’ என்ற கட்சி தொடங்கப்பட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதியோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி அக்கட்சியின் பொன்விழாவை கொண்டாடும் பணிகளில் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தலைமைக் கழகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், நாளை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மறுநாள் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்துக்குச் செல்லவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வைகோ மகன் அரசியல் என்ட்ரி கொடுக்கிறாராமே.

வாரிசு அரசியல் வேண்டாமென்றுதான் ம.தி.மு.கவையே தொடங்கினார் வைகோ. அவரது மகன் துரை வைகோவை ம.தி.மு.கவின் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வரும் வேலைகள் தொடங்கிவிட்டதாம். வாரிசு அரசியல் கூடாதென்ற சொன்ன அவரே இதனை செய்வதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். அதுவும் பெரும்பாலான முக்கிய மாநில பொறுப்புகள் வகிப்பவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே. அவர்கள் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பணிகளிலும் நடந்து வருகின்றதாம். ஆனால் ம.தி.மு.கவை சேர்ந்த தொண்டர்களோ ”இத்தனை காலம் இந்த கட்சியால் நாம் கண்ட பலன் என்ன? மீண்டும் முதல இருந்தா?” என குமுறுகிறார்களாம்
”பாவம்”
சரி சரி பாவம் புண்ணியம் எல்லாம் அவர் அவர் செய்யும் செயலை வைத்தே… ரொம்ப நாளைக்கு பிறகு வெள்ளிக்கிழமை கோவில் திறக்கவுள்ளனர். நான் குறிச்சி பொங்காளியம்மனை பார்த்துட்டு வருகிறேன் என கிளம்பினார் குறிச்சியார்.
Be First to Comment