தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ட்வீட் செய்து கொண்ட விவகாரம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த பலதரப்பட்ட விமர்சனங்கள் பாராட்டுகளாகவும், குற்றச்சாட்டுகளாகவும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடைக் காலத்தில் வெப்பம் வாட்டி வதக்கி வரும் நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்வெட்டு பிரச்சினையைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் தனது ட்விட்டரில், “ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!” என்று பதிவிட்டார்.

அதற்கு பதல் அளிக்கும் விதமாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு ‘உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்” என்று பதிவிட்டார்.

செந்தில் பாலாஜி கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜிக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற ‘குடிசையில’ அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!” என்று சுளீர் பதில் அளித்திருந்தார்.

இந்த கருத்துக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, “குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!” என்று பதில் அளித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பாக ஆரம்பித்த விவாதத்தில் இருவரும் காராசார கருத்துகளை பதிவிட்டது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Be First to Comment