கோவையில், 75-வது இந்திய “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா”-வை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
75-வது இந்திய சுதந்திர தின பவள விழாவினையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி 06.04.2022 வரையிலான 7 நாட்களும் மாலை 5.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது .
இக்கண்காட்சியில் கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு, தேச விடுதலைக்கு வித்திட்ட வீரர்களின் புகைப்படங்கள் குறித்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும், நம்நாட்டு விடுதலைக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை பற்றியும் விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
மேலும், வருவாய்த்துறை, மகளிர்திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுகாதாரத்துறை, சித்த மருத்துவத்துறை, மாவட்ட சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் அவர்களை பற்றி இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்தகொள்ளும் வகையில் நடத்தப்படும் இக்கண்காட்சியினை பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் பார்த்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Be First to Comment