டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பீளமேடு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதில்,பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் வி.கே.டி.சுரேஷ் தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட தலைவர் கோபால் மற்றும் அமைப்பு செயலாளர் முருகேசன்,மாநில துணை பொருளாளர் சண்முக வேல் மணிகண்டன்,மாநில துணைசெயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, பணி நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டும், மேலும் சிறுசிறு காரணங்களுக்காக பணி நீக்கம் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்,கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் பி.எம்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைளை நடந்து வரும் சட்டமன்ற கூட்டதொடரிலேயே நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், அருள் பிரதீப் குமார்,கோவை மாவட்ட பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சதீஸ்குமார்,செல்வராஜ் உட்பட பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment