மனம் தளராத இளம் குறுந்தொழில் முனைவோர், இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கரும்பு சாறு, இளநீர் விற்பனை செய்து சாதித்து வருகிறார்.
கோவை பீளமேடு சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த இளம் தொழில் முனைவோரான கனகராஜ் கடந்த 25 வருடங்களாக மோட்டார் ரிவைண்டிங் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சேரன் மாநகர் பகுதியில் தற்பொழுது கே.எஸ்.நவீன் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கொரானாவின் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவிவருவதால் ஜாப் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளதால், கனகராஜ் மனம் தளராமல் தனது ரிவைண்டிங் செய்யும் நிறுவனத்தை தற்பொழுது இளநீர் கடையாகவும், கரும்புச்சாறு விற்பனை செய்யும் கடையாகவும் மாற்றியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கனகராஜ், ”நான் கடந்த 25 வருடமாக இன்ஜினியரிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஜி.எஸ்.டி வந்ததில் இருந்தே தொழில் மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில் கொரானா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் ஜாப் ஆர்டர்கள் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. ஆனால் இதையே நினைத்து கொண்டு இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. எனவே தற்போது இளநீர், மற்றும் கரும்புசாறு விற்பனையை துவங்கியுள்ளேன். நிலைமை சீரடைந்ததும் மீண்டும் மோட்டார் தொழிலில் ஈடுபடலாம்” என்று மனம் தளராமல் தன்னம்பிகையுடன் கூறுகிறார். இவரின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Be First to Comment