Press "Enter" to skip to content

தமிழக அரசின் மின் கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,தாமோதரன்,ஏ.கே.செல்வராஜ்,ஜெயராமன், கந்தசாமி,அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த ஒன்றரை ஆண்டில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால், மின்கட்டணம் மற்றும் வீட்டு வரியை உயர்த்தாமல் இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.அதிமுக ஆட்சியில் வாரம் தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை முடுக்கி விடுவோம்.ஆனால் இன்று ஒன்றும் செய்வதில்லை எனக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன இருக்கிறது.எதற்காக என் வீட்டில் மூன்று முறை ரெய்டு. அம்மா இறந்த பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயன்றபோது நான் உள்ளிட்டவர்கள் உடனிருந்து எடப்பாடியை முதல்வராக்கினோம்.ஆட்சியை காப்பாற்றினோம்.

கூட்டனி அமைவதற்கும் முக்கிய காரணமாக இருந்தேன். என்கட்சி ஆட்சியை காப்பாற்ற உணர்வு பூர்வமாக செயல்பட்டோம். எத்தனை வழக்குகள் போட்டாலும், அஞ்ச மாட்டேன். என் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தி என்ன எடுத்தீர்கள்? பத்து ஆண்டு கட்டப்பஞ்சாயத்து இல்லை, லஞ்சம் இல்லை, மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தோம். என் வீட்டில் ரெய்டு நடந்தபோது காவல்துறை நடந்த விதம் கோவை மாநகர காவல் காவல் துணை ஆணையர் எம்.எல்.ஏக்களை கையை பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளார். தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ளனர் காவல் துறையினர். யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. கைகூலியாக அடிமையாக உள்ளது காவல்துறை. எங்கள் சகோதரர்கள் மீது கை வைத்தவர்கள் சட்டையை கழட்டாமல் விட மாட்டோம். கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை தடுக்க காவல்துறைக்கு தைரியம் இல்லை.

காவல் துறை அத்துமீறலுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மு.க.ஸ்டாலின் என்ன கடவுளா?இவரை போல் எத்தனையோ பேர் முதல்வராக வந்துள்ளனர். ஆனால் இவ்வளவு மோசமாக பழிவாங்கும் வஞ்சகர்கள் இருந்ததில்லை. கொலுசு மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இன்று எவ்வளவு வரியை உயர்த்தியுள்ளனர். குழந்தைக்கு பொம்மை வழங்குவது போல் பணம் வழங்கி, இன்று வரியை உயர்த்தியுள்ளனர். திமுக அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாரி குவிக்கின்றனர். கந்துவட்டி போல் வசூலிக்கின்றனர் 50000 கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் சம்பாதித்துள்ளது. யார் யாரிடம் வாங்கினீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். சும்மா விட மாட்டோம். கோவை மாநகர துணை ஆணையர் சிலம்பரசன், தன்னை சினிமா சிம்பு மாதிரி நினைத்துள்ளார். கட்சி பெண்களையும், வழக்கறிஞர்களையும் தொட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவல்துறைக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவைக்கு என்ன செய்தார்கள். கோவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியலிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். எந்த வேலையையும் திமுக அரசு செய்யவில்லை. சாலைகள் போட மாநகராட்சி நிர்வாகத்திற்கு வக்கில்லை. ஆட்சியர் பொம்மைபோல் உள்ளார் ஒரே கொள்கை, கொள்ளை அடிப்பது மட்டுமே. எந்த திட்டமும் செய்யாத அரசாக உள்ளது. நான்கு ஆண்டு எடப்பாடி சிறப்பான ஆட்சியை தந்தார். மக்களை பற்றி கவலைப்படாத அரசு கட்டுமான அப்ரூவல் ஜி ஸ்கொயருக்கும் மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் உட்பட இன்று எந்த தரப்பும் நன்றாக இல்லை. மீடியாவை மிரட்டி வருகிறார்கள். நீதிபதிகள் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களையே மிரட்டக்கூடியவர்கள் திமுக வினர். மீடியா ஸ்டாலினை கைவிட்டால் ஆட்சி முடிந்து விடும்.

பாராளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் அதிமுக ஆட்சியமைக்கும். இதற்கு மேலாவது உயர்த்திய மின் கட்டணத்தை நிறுத்தி வையுங்கள். விசைத்தறியாளர்கள் இன்று வேலை நிறுத்தம். ஆனால், அதை பற்றி கவலைப்படவில்லை திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவரே திமுக ஆட்சி பற்றி பேட்டியளித்துள்ளது . சிறந்த எடுத்துக்காட்டு தினசரி இரண்டு உதயசந்திரன் திமுகவினரை விட மோசமாக செயல்பட்டு வருகிறார். பழிவாங்கி வருகிறார்.அமைச்சர்கள் கொள்ளையடிப்பதை ஸ்டாலின் குடும்பத்திற்கு வழங்கவும், உதவி வருகிறார். காவல்துறைக்கு அவர்தான் செயலாளர்.முடிந்தால் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை செய்யுங்கள். இத்தனை பழிவாங்கும் செயலை செய்வது இந்த ஐஏஎஸ் தான் மின் கட்டண உயர்வை நிறுத்த வேண்டும். நாங்கள் டெண்டர் விட்ட சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ நிதியையும் கடந்த ஆறு மாதமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு காவல்துறையினர் நெருக்கடி தராதீர்கள் என தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks