கோவையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் பாடலுக்குப் பின் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட சம்பவத்தால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாட்கள் தேசிய கயிறு வாரிய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கயிறு வாரிய தலைவர் குப்புராமு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வழக்கமாக பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாமல் கணபதி ஹோமம் பாடப்பட்டது. அதன் பின்னர்தான் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. கணபதி ஹோமம் பாடலுக்குப் பின்னரே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் இச்சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment