மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்பவர்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி முகாம் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் நாள் தோறும் சராசரியாக 3 பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே மன அழுத்தம், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்பவர்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சார்பில் கவுன்சிலிங் மையம் கோவையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பணிபுரியும் 85 பெண் போலீசாருக்கான 2 நாட்கள் பயிற்சி முகாம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கியது.

இந்த முகாமை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்து கூறியதாவது:-
காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள் ஒரு நொடியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கினால், அவர்கள் தற்கொலை செய்வதில் இருந்து நாம் தடுக்கலாம். ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமமாகும். இந்த 2 நாட்கள் பயிற்சி முகாம் முடிந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பகுதியில் கவுன்சிலிங் மையம் தொடங்கப்படும். இந்த மையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Be First to Comment