நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கிராமப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்த நிலையில், குன்னூர் அருகேவுள்ள கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட கூக்கல் கிராம பகுதியில் கடந்த சில மாதங்களாக அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து உணவை தேடி கிராமத்திற்குள்ளும், தேயிலை தோட்டங்களிலும், சாலைகளிலும் கரடி வலம் வந்துக் கொண்டிருந்தது.
சுமார் ஒரு வயது மதிக்க தக்க இரண்டு கரடிகள் வனத்துறை வைத்த கூண்டில் கடந்த மாதம் சிக்கியது.அதனை கட்டப்பெட்டு வனசரகர் செல்வக்குமார் தலைமையில் வனத்துறையினர் பிடித்து முதுமலையில் விட்டனர்.

ஆனால் கூண்டில் சிக்காத தாய் கரடி, தினந்தோறும் கூக்கல் கிராமத்திற்கு குட்டிகளை காண வரும். கூண்டின் அருகே வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஒரு மாதமாக கூண்டு வைத்து சிசிடிவி கேமரா மூலமாக இரவு முழுவதும் கண் விழித்து, பார்த்து வந்த நிலையில் கரடி அப்பகுதியில் வலம் வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில், வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தனர்.
மனிதர்களை கரடி தாக்கும் முன்னதாக, கரடியை ஒரு சில நாட்களில் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விடுவேன் என வனசரகர் உறுதியளித்திருந்தார். அதன் பேரில் நேற்று இரவு கூண்டில் கரடி சிக்கியது. இதனையடுத்து முதுமலையில் குட்டிகள் விடப்பட்ட அதே இடத்திலேயே தாய் கரடியை வனத்துறையினர் விடுவித்தனர்..
Be First to Comment