தமிழகத்தில் இதுவரை நடந்த கட்சி கூட்டங்களில் சற்று வித்யாசமான முறையில் நடைபெற்ற கூட்டம் என்றால் அது நேற்று திருச்சியில் நடந்த தி.மு.க கூட்டம்தான். வழக்கமான கட்சி கூட்டம் போல் இல்லாமல் மக்களுக்கு பல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையிலான கூட்டமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
இதுவரை இல்லாத வகையில் நிகழ்ச்சியில் மூன்று மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. வரிசையாக நின்று கொண்டு சால்வை அணிவிப்பது, கூட்டத்தில் தள்ளுமுள்ளாக இருக்கைக்கு பொறுப்பாளர்கள் செல்வது, மைக்கை பிடித்து கொண்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்புவது. துதி பாடுவது என்ற வழக்கமான விசயங்கள் அனைத்தும் மிஸ்ஸிங்.
நடுவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்டாலினுடன், முதன்மை நிர்வாகிகளான துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு மற்றும் துணை பொதுச்செயலாளர்களான இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. இராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோருக்கு மட்டும் இருக்கை இருந்தன. மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அருகிலிருந்த மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அமர்ந்திருக்க மற்றொரு மேடையில் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். ஒரு மேடையில் இருந்து மற்ற மேடைக்கு செல்லாத வகையில்தான் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
இவையெல்லாம் நிகழ்ச்சியின் நோக்கம் மாறாத வண்ணமும், தேவையற்ற நேர வீணடிப்பையும் போக்கும் வகையிலும், மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்ல ஏதுவாக இருந்தது. அதேபோல் நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் தி.மு.க தொண்டர்களுக்கும், மக்களுக்கும் என்ன போய் சேர வேண்டும் என நினைத்தனரோ அதனை உரை வடிவில் அருமையாக கொண்டு சேர்த்தனர். வழக்கம் போல் கட்சியினரை அதிகம் பேச வைக்காமல், துறை வல்லுநர்களை பேச வைத்தது பலரால் பாராட்டப்பட்டது.

முதலில் பேசியவர் முனைவர்.ஜெயரஞ்சன். பொருளாதாரம் என்ற தலைப்பில் பேசினார். அதேபோல் கல்வி குறித்து பிரின்ஸ் கஜேந்திர பாபு, சுகாதாரம் குறித்து மருத்துவர் ரவீந்திரநாத், சமூகநீதி குறித்து மதிமாறன், ஊரக உட்கட்டமைப்பு பற்றி சுப.வீரபாண்டியன், நகரப்புற வளர்ச்சி குறித்து மருத்துவர்.எழிலன் நாகநாதன், நீர் வளம் குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், வேளாண்மை குறித்து பாலசுப்பிரமணிய தீட்சிதர் ஆகியோர் தங்கள் துறை சார்ந்து, கொள்கை சார்ந்து பேசியது இதுவரை தி.மு.க மேடைகளில் காணாதது.

அதேபோல் மேடைகளிலிருந்து பல அடிகள் ஸ்டாலின் நடந்து மக்கள் அருகில் வரும் வகையில் பாதை இருந்தது. ஸ்டாலின் அருகில் பார்க்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தி கொடுத்தது. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சியாக இல்லாமல் மக்களின் அருகில் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வரும் நிலையில் இருந்ததை உணர முடிந்தது.
`விடியலுக்கான முழக்கம்’ என்ற நிகழ்ச்சி நிச்சயம் தி.மு.கவிற்கு ஒரு விடியலை இந்த தேர்தலில் தரும் என்ற நம்பிக்கையினை தொண்டர்கள் மத்தியில் விதைத்துள்ளது.
Be First to Comment