சர்ச்சை வீடியோவில் தொடங்கி மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது வரை, சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே, தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா. இந்தச் சூழலில், அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் புது தகவல் கிளம்பியது.
இதனால் நித்யானந்தா மரணம் அடைந்து விட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த சூழலில் நித்தியானந்தா கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றில் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில், நான் சாகவில்லை, சிவ சிவ… திரும்பி வந்துவிட்டேன். பிழைகளுக்கு மன்னிக்கவும். வெறுப்பாளர்கள் நான் இறந்து விட்டதாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் சமாதி மனநிலையில் இருக்கிறேன். என்னால் முழுமையாக இன்னும் யாருடைய பெயரை நினைவுபடுத்தவோ, இடத்தையோ, நினைவுகளையோ மீட்டுக் கொண்டு வருவதில் சிரமப்படுகிறேன்.
உங்களுடைய அன்புக்கு நன்றி. பக்தர்களின் வேண்டுதலால் குணமடைந்து வருகிறேன். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். என் உடம்புக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. விரைவில் பூரண குணமடைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதம் ரீதியாக எந்த நிகழ்வு, சர்ச்சைகள் எழுந்தாலும் அதில் தன் கருத்தை சூட்டோடு பதிய வைப்பவர் நித்தியானந்தா. ஆனால், உடல் நலிவுற்று சோர்ந்த கண்களுடன் அவர் போட்டோக்களை வெளியிட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Be First to Comment