வருகின்ற 11.02.2021 அன்று தை அமாவாசை வருகின்றது. அமாவாசைகளில் மகிமை நிறைந்தது தை அமாவாசை தினம். இந்த நாளில் தவறாமல் செய்ய வேண்டியது நீத்தார் கடன். கடன் என்பதற்குக் பெற்றோர்களுக்கு நாம் செய்கின்ற கடமை என்று பொருள். இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் இந்தக் கடன் உண்டு.
இந்தகடன் புண்ணியமானது, முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், நம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை அன்று இந்த கடமையை நாம் செய்ய வேண்டும்.

செய்ய வேண்டியது :
தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்பது நீண்ட நாளைய நம்பிக்கை.
நம் முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை சூரிய உதயத்திற்கு முன் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.
தர்ப்பணத்தை கொடுக்கும் போது கிழக்கு முகமாக பார்த்தபடிதான் அமர்ந்து கொடுக்க வேண்டும்.
அமாவாசையன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிட வேண்டும். இதற்கு காரணம் காகத்துக்கு சாதம் வைத்தால், மேலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று நம்பிக்கை.
அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும்.

செய்யக்கூடாதது :
அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது, வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது.
ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க கூடாது.
மற்றவர்களிடம் இருந்து கறுப்பு எள்ளை கடனாக வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு நீரில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும், கரையில் செய்யக் கூடாது. அதேபோல் தரையில் இருந்து கொண்டு தரையில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் நீரில் செய்யல் கூடாது.
வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இதன் மூலம் நமது சந்ததியினரை முன்னோர்கள் வாழ்த்துவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் . அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு. அது போல ஆடைகள் தானமும் மிகவும் சிறப்பு.
Be First to Comment