நிரந்திரமற்ற தூய்மைபணியாளர்களை நிரந்திரப்படுத்திட வேண்டும் பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல்

நிரந்திரமற்ற தூய்மைப்பணியாளர்களை நிரந்திரப்படுத்திட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார்.
கொரோனா பேரிடர் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கோவை மாவட்டத்திலும் இந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரத்தை தாண்டி வருவது கவலையளிக்கிறது.
தொற்றால் பாதித்தவர்களை குணமடைந்து வீடு திரும்ப முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஓய்வின்றி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை பொதுச்சமூகம் என்னென்றும் நன்றியுடன் நினைவு கூறும். அதேநேரத்தில் தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்போது சுற்றிச்சுழன்று பணியாற்றும் முன்களப்பணியாளர்கள் பணிச்சுமையின் காரணமாக தளர்ந்துவிட்டால் ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் சீர்குலைந்து போகும் ஆபத்து உள்ளது.
தற்போது நான் மருத்துவர்கள் செவிலியர்களை விசாரித்தவரையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவருகிறது. இவர்கள் தங்களுக்கு ஓரிரு நாட்களாவது ஓய்வு வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஊழியர்களின் பணிச்சுமையை கணக்கில் கொண்டு உடனடியாக தங்களின் அதிகாரத்திற்குட்பட்டு தேவைக்கேற்ப மருத்துவ ஊழியர்களை நியமிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். இதேபோன்று சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வரும் நிரந்திரமற்ற தூய்மைப்பணியாளர்களை நிரந்திரப்படுத்திடவும், புதிதாக ஊழியர்களை நியமித்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இவர்களின் உழைப்பை அங்கிகரிக்கவும், மேலும் உற்சாகத்தோடு பணியாற்றவும் உதவி செய்யும். இதேபோன்று ஒப்பந்த பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கான அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதேபோன்று காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும். இதேநேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தொற்று பாதித்தவர்களின் தொடர்புகளை முழுமையாக கண்டறிந்து இத்தொற்றின் சங்கிலியை உடைத்திட வேண்டும். ஆனால் இவ்விகாரத்தில் போதிய ஆர்வம் காட்டவில்லையோ என்கிற ஐயம் நிலவுகிறது. சோதனையில் நேர்மறை முடிவு வந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரும் ஏற்பாடுகள் கடந்த முதல் அலையின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதித்தவர்கள் சோதனை முடிவு அறிந்தவுடன் நேரிடையாக பேருந்து, ஆட்டோ போன்று பொதுப்போக்குவரத்தின் மூலம் மருத்துவமனைக்கு செல்கிற நிலை உள்ளது. இது மேலும் தொற்று பரவலை அதிகப்படுத்தும் என்பது கண்கூடு. உடனடியாக தொற்று பாதித்தவர்களை இருக்கும் இடத்தில் இருந்தே ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து வருகிற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கூடுவதால் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது ஏழாயிரம் படுக்கைகள் இருப்பு உள்ளது என சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது சுகாதாரத்துறையின் கணிப்பாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்தால் ஓரிரு நாட்களுக்குகூட போதாது. இந்நிலையில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் போதுமானதாக இருக்காது என கருதுகிறேன். உடனடியாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றை சிகிச்சை மையங்களாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். மேலும், மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வருகிறது. அவசத்தேவைக்கான மருந்துகளை கைவசம் வைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.
இதேபோன்று தற்போது தனியார் மருத்துவமனைகள் தனியார் விடுதிகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு அந்த விடுதி அறைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் மருத்துவமனைகள் கணக்கு வழக்கின்றி கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்காணிக்காக அரசு தரப்பில் இருந்து குழுக்களை அமைக்க வேண்டுகிறேன்.
இதேபோன்று கொரோனா தடுப்பூசி மே.1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி தடுப்பூசிகள் கைவசம் ஏதும் இருப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில் இம்மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை பெருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இந்த தடுப்பூசியை செலுத்த குறிப்பிட்ட இடங்கள் என தீர்மானிக்காமல் பரவலான இடங்களை தேர்வு செய்ய வேண்டுகிறேன். இந்த தடுப்பூசியை செலுத்த அனைத்து இஎஸ்ஐ டிஸ்பென்சரி (மருந்தகம்) கிளைகளிலும், ஊராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சி அலுவலகங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டுகிறேன்.
இதுபோன்ற பணிகளை செய்வதற்கு கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் முன்வருவார்கள். இவர்களை ஒருங்கினைக்கும் பணிகளை மேற்கொண்டு இந்த பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டுகிறேன். மேலும், கோவை மாவட்டத்தில் இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்கிற ஆலோசனை கூட்டத்தை கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டுகிறோம்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *