Press "Enter" to skip to content

நீதித்துறை விருந்தினர் மாளிகையை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்தார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை, சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பந்தாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த நான் சட்டம் படிக்கவில்லை என்றாலும் சட்டம் மற்றும் நீதித்துறையை தொடர்ந்து பின்பற்றி வருவதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் கூறினார்.

ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ளது எனவும் நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும், தமிழக பட்ஜெட்டிலும் நீதித்துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும் அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளதாகவும், முதல்வரும், நான் பொறுப்பு வகிக்கும் நிதித்துறையும், நீதித்துறை கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி, தான் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது தமிழக நிதியமைச்சரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன் அப்போது நீதித்துறைக்கு என்ன தேவைப்படுகிறது எனக் கேட்டறிந்ததாகவும் தற்போது தமிழக அரசு நீதித்துறைக்கு 1,400 கோடி ஒதுக்கீடு செய்ததுடன் இதை எப்படி சமாளிப்பீர்கள் என்பதற்கு நான் வங்கியில் வேலை செய்தவன் எனக்கு கணக்கு நிர்வாகம் தெரியும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 ஏக்கரில் 500 கோடி மதிப்பிலான நிலம் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் நகருக்கு நடுவே இவ்வளவு மதிப்புள்ள நிலத்தை வழங்க பல அரசுகள் தயக்கம் காட்டி வந்த சூழலில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தை முதல்வர் தீர்த்து வைத்தார் என தெரிவித்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பு பற்றி நிதியமைச்சர் கூறியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தான் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது என தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைக்கும் சதவிகிதம் 109% ஆக உள்ளது என்றும், ஒரு மாதத்தில் 100 வழக்குகள் தாக்கல் ஆகிற இடத்தில் 109 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன என்றும் கூறினார். மேலும் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசிடம் 116 நீதிமன்ற அறைகள் வேண்டும் என கேட்டிருந்ததாகவும், ஆனால் 150 நீதிமன்ற அறைகள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்பட்டது எனவும் பாராட்டு தெரிவித்தார். நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடங்களே இருக்கும் நிலையிலும், வழக்குகளை விரைந்து முடித்து வருகிறோம் என்றும் சென்னையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டியாதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks