பணி நீட்டிப்பு, சம்பள பாக்கி பெற்று தர வலியுறுத்தி கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நீட்டிப்பு செய்ய கோரியும், 3 மாத கால சம்பள பாக்கியை பெற்று தருமாறும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்ப்பட்ட செவிலியர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் தற்காலிக பணிக்காக பணியமர்த்தப்பட்ட நிலையில் தங்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் தரப்படவில்லை என கூறினர். மேலும் non covid பணிகளும் தங்களுக்கு அளிக்கபடும் நிலையில் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்ய தங்களுக்கு பணி நீட்டிப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தற்போது தங்களின் பணி காலம் முடிந்ததால் தங்களை வெளியே செல்லும் படி அதிகாரிகள் கூறி வருவதாகவும் ஆனால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கியை வாங்காமல் எவ்வாறு வெளியேறுவது? என்றும் தாங்கள் இருக்கும் போது சம்பளம் தராத அதிகாரிகள், நாங்கள் வெளியே சென்ற பிறகு எப்படி சம்பளம் வழங்குவார்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதனால் தங்களுக்கு சம்பள பாக்கியை பெற்று தருமாறும், முதல்வர் இதில் கவனம் செலுத்தி அவர் தங்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும் முதல்வர் கொரொனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளதால் முதல்வர் மீது தங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தனர்.
Be First to Comment