தமிழகத்தை இரண்டாக பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழில் வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ்நாட்டை சாதிரீதியாக பிளவுபடுத்தும் எண்ணத்தில் கொங்குநாடு யூனியன் பிரதேசம் ஆகிறது என இன்று நாளிதழ் ஒன்று தன் விஷமத்தை தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இப்போது உள்ள தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற என்ற எண்ணத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்கள் ஆக ஆக்க வேண்டுமென்ற பாரதிய ஜனதாவின் கொடூரமான திட்டத்திற்கு அந்த நாளிதழ் பரப்புரை செய்யத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆளுகிற திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சியை கேட்பதும், இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதும், நீட் தேர்வை எதிர்ப்பது, ஜிஎஸ்டி வரியை எதிர்த்துப் பேசுவது என இதுவெல்லாம் ஒன்றிய அரசை கோபப்பட வைத்திருக்கிறது. அதற்காக கொங்குநாடு யூனியன் பிரதேசம் என்ற விளையாட்டை பி.ஜே.பி தொடங்கியிருக்கிறது என்று செய்தி வெளியிட்டு பி.ஜே.பிக்கு தூபம் போடுகிறது
தமிழ்நாடு என்றால் இவர்களுக்கு கசக்கிறது
ஆனால் கொங்குநாடு என்றால் இனிக்கிறதா?
இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமைகளை கேட்கும் வலிமையான அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளது. உரிமைகளை கேட்பவர்களின் வலிமையை குறைப்பதற்கு யூனியன் பிரதேசங்கள் என்ற செய்தியை பரப்பி, திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டப் பார்க்கிறார்கள்.
எட்டு ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் சிறு குறு தொழில்களை நலிவடைய செய்தது, கொங்கு மக்களுக்கு எதிராக ஒன்றியத்தில் ஆட்சி செய்துகொண்டு சாதிய ரீதியாக தமிழ்நாட்டை பிரித்து குளிர்காய பார்க்கிறது.
ஒரு பக்கம் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்று பேசிக்கொண்டு ஒரு மாநிலத்தில் ஒரு மொழி பேசுகின்ற மக்களை பிளவுபடுத்துகிற சதியை பி.ஜே.பி-யும், அவர்களின் ஆதரவு பத்திரிகைகளையும் செய்து வருகிறார்கள். இது போன்ற மயக்க பிஸ்கட்டுக்கு கொங்கு மண்டல மக்கள் மயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டை பிளவுபடுத்துகிற எந்த சதியையும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
தமிழ் மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்த தூண்டும் அந்த பத்திரிகையை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன் நடத்துவுள்ளது” என கூறியுள்ளார்.
Be First to Comment