கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 555 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் தெரிவித்ததாவது, ”முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறையை உருவாக்கி இத்துறைக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்தார்.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.
மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் மூலம்; 38891 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதுவரை 2,898 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையான தகவல்கள் இல்லாத 3,768 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 32,225 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இம்மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இன்று 555 மனுதாரர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது.
மேலும் சாலை மேம்பாடு குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் குறைகளும் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலமைச்சர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். எனவே இந்த சிறப்புத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வுகளை துரிதப்படுத்தி விரைவில் மீதமுள்ள அனைத்து மனுக்களுக்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Be First to Comment