Press "Enter" to skip to content

பல மொழிகளில் பாடல்களை பாடி அசத்துகிறார்,தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்மணி ரெஜினா லூக்காஸ்!

உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கவும், சக ஊழியர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் தேயிலை பறிக்கும்போது பல மொழிகளில் பாடல்களை பாடி அசத்தும் பெண்மணி ரெஜினா லூக்காஸ், மேடை கச்சேரிகளில் பல முறை வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் நேரங்களில் பாடல்களை பாடி ஆறுதலை அடைவதாக கூறுகிறார்… நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ரெஜினா லூக்காஸ் (வயது 48). இவர் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்களின் படுக மொழி பாடல்கள் முழுமையாக இசை பயிலாமல் கேள்வி ஞானத்தின் மூலம் சிறு வயது முதலே பாடல்கள் பாடி தங்கள் குடும்பங்கள், ஆலய வழிபாடுகள் முதலானவற்றில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணி செய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தங்களின் வேலை களைப்பு தெரியாமல் இருக்க தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் தினந்தோறும் தேயிலை பறிக்கும் பணி செய்யும் போது பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் இடம்பெற்று இருந்த பி.சுசிலா அவர்கள் பாடிய பாடலான சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடலை பாடியுள்ளார் .அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போனில் பதிவிட்டுள்ள இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இது குறித்து தேயிலை தோட்ட தொழிலாளி பெண்மணி ரெஜினா லூக்காஸ் கூறுகையில், சிறுவயதில் இருந்தே இசையின் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், பி சுசிலா அவர்கள் மீது ஏற்பட்ட பற்று காரணமாகவும் இசையின் மீது தனக்கு ஆர்வம் வந்தது.

அதன்படி கேள்வி ஞானத்தின் மூலம் பாடல்களை கற்றுக்கொண்டு வீட்டு விசேஷங்கள் மற்றும் ஆலய வழிபாடுகள் ஒரு சில மேடை கச்சேரிகள் பாடியுள்ளேன்.ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் பாடல் இந்த அளவிற்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை எனது இசை பயணத்திற்கு எனது கணவரும் குடும்பம் மட்டுமே ஊன்றுகோலாக இருந்து வருகின்றனர். பலமுறை வாய்ப்புகள் தேடியும் இதுவரை எந்தவித வாய்ப்புகளும் கிடைக்கவில்லை, தனக்குத் தெரிந்து பிரபலமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த பாடல் தான் என உருக்கமாக தெரிவிக்கின்றார்.சிறுவயதில் இருந்து தனக்கு இசையின் மீது ஆர்வம் இருந்து வந்த நிலையிலும், இசையின் மீது தனக்குள்ள ஆர்வத்திற்கு இன்றும் தனது கணவர் உறுதுணையாக இருப்பதாகவும், ஆனால் இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் நேரங்களில் குடும்பத்தினரிடம் மற்றும் தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவும், பாடல்களை பாடி தனது மனதை ஆறுதல் படுத்திக் கொள்வதாக தெரிவிக்கிறார்.

மேலும் இது குறித்து அவரது கணவர் லூக்காஸ் கூறுகையில், ஆரம்ப கட்டத்தில் தங்கள் இருவருக்கும் மேடை நிகழ்ச்சிகளில் பல முறை வாய்ப்புகள் கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், தன்னைவிட தன் மனைவி இன்றும் மிக அழகாக பாடல்களை பாடுவார் எனவும், இன்றும் தனது மனைவிக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருப்பதாக கணவர் லூக்காஸ் தெரிவிக்கின்றார்.இதுக்குறித்து தேயிலைத் தோட்ட சக பணியாளர்கள் கூறுகையில், தேயிலை பறிக்கும் பணியின் போது களைப்பு தெரியாமல் சகப் பணியாளர்களையும் உற்சாகப்படுத்த ரெஜினா பி.சுசிலா அவர்களின் குரலில் இனிமையாக பாடுவது சுசிலாவே பாடுவது போல் இருப்பதாகவும், இதனால் தங்களுக்கு உழைப்பின் களைப்பு தெரியாமல் இருப்பதாகவும் ரெஜினாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக சகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.தேயிலை பறிக்கும் தொழிலாளியான ரெஜினா லூக்காஸ் அவர்களுக்கு மேடையில் வாய்ப்பு கிடைக்குமா என அவரது குடும்பத்தினர் மற்றும் சக தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது…

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks