கோவை மதுக்கரையை சேர்ந்த பள்ளி மாணவி கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று முதல் முறையாக பள்ளிக்கு சென்ற நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் மர்மமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மதுக்கரை மார்க்கெட் சர்ச் காலனியை சேர்ந்த பார்த்திபன் சகாயராணி தம்பதிகளின் மகள் குனியமுத்தூர் நிர்மலா மாதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறைக்கு பின்பு முதலாவது நாளாக பள்ளி திறந்த நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார் .

அப்போது வகுப்பறையில் காலை 11;30 மணியளவில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.இந்த நிலையில் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் பள்ளி நிர்வாக ஆசிரியர்கள் சிறுமியை குனியமுத்தூரில் உள்ள சங்கீதா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சூழலில் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மருத்துவர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவர்கள் சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் சில மணி நேரங்களில் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த மாணயின் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாணவியின் உறவினர்கள் நல்ல நிலையில் சென்ற சிறுமிக்கு இம்மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியதுடன் ,குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பது குறித்து தகவல் அளித்திருந்தால் வேறு பெரிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்துச் சென்று பாதுகாத்து இருப்போம் எனவும் தெரிவிக்கின்றனர்.
பள்ளி திறந்த முதல் நாளில் மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகே மாணவியின் மர்ம மரணத்திற்கு விடை கிடைக்கும்.மேலும் மாணவிக்கு சிகிச்சை கொடுத்த சங்கீதா மருத்துவமனை புதியதமிழகம் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமியின் சொந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment