கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1600 ஆண்டு கால பழமைவாய்ந்த அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.இவற்றிற்கு அருகில் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றது.இந்த சூழலில் ஈஸ்வரன் திருக்கோவில் மற்றும் தனியார் பள்ளி இடையே புதிதாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.இந்த தீர்மானத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், அண்மையில் அங்கு நில அளவை செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து பேரை மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் ஐந்து பேர் மின்மயானம் அமைக்க வேண்டாம் என்றும் வேறு பகுதிக்கு அந்த மயானதை இடமாற்றம் செய்ய உத்தரவிடுமாறும் வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொது மக்கள், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் மற்றும் பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இருந்தும் அதன் அருகே மின் மயானம் அமைப்பது என்பது கண்டிக்கத்தக்கது எனவும், மின்மயானம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிவித்தனர். ஏற்கனவே கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் செல்லும் பேருந்துகள் ஒத்தக்கால் மண்டபம் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலம் ஏறி செல்வதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில் மின் மயானம், நெடுஞ்சாலைக்கு அருகிலேயே அமையும் பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தற்போது அமைய உள்ள இடத்தை விடுத்து வேறு பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலேயே மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Be First to Comment