கோவை-பொள்ளாச்சி வழியாக ரயில்கள் 17 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் இயக்கப்பட்டது. இதனை வானதி சீனிவாசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கோவை போத்தனூர்-பொள்ளாச்சி இடையே சுமார் 35 கி.மீ தொலைவுக்கு மின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக அந்த வழியாக ரயில் சேவை கடந்த 17 மாதங்களாக இயக்கப்பட வில்லை.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலை, படிப்பு மற்றும் சொந்த வேலை காரணமாக வருபவர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்தும், மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததாலும் இன்று முதல் கோவை போத்தனூர்-பொள்ளாச்சி வழியாக மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டன.
இன்று மதியம் 2.10 மணிக்கு கோவையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06463) பழனிக்கு புறப்பட்டது. இந்த ரயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை ரயில்நிலையம் வழியாக சென்று மாலை 4.40க்கு பழனி சென்றடையும். இந்த ரயில் சேவையை பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”கோவையில் இருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி வழியாக பழனிக்கு மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த 80 ரூபாய் கட்டணத்தில் சாதாரண மக்களால் பயணம் செய்ய முடியும். ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பழனி கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களை இணைக்கும் பயணமாக இந்த ரயில் சேவை உள்ளது. இதேபோல் கோவை-பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் எனவும், மதுரையிலிருந்து குறைவான நேரத்தில் கோவைக்கு வருவதற்காக இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட வேண்டும், கோவை பொள்ளாச்சி வழியாக தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இதேபோல், கோவையில் இருந்து வரும் 13ம் தேதி முதல் தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்(06419) போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். பொள்ளாச்சியில் இருந்து வருகிற 14ம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 மணிக்கு கோவை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சுமார் 17 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதற்கு கோவை-பொள்ளாச்சி செல்லும் ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Be First to Comment