பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் அம்மன் கோவிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.

கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில் உள்ள பில்லுார் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்வரத்து அதிகரித்து கடந்த, 5ம் தேதி முதல் அணை நிரம்பி வழிகிறது.நேற்று காலையிலிருந்து வினாடிக்கு, 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் பாதுகாப்பு கருதி வருகின்ற தண்ணீரை, நான்கு மதகுகள் வழியாகவும் மற்றும் மின் உற்பத்தி செய்யவும் திறந்து விடப்பட்டது.

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலத்தின் அருகே, ஆற்றில் பவானி அம்மன் கோவில் உள்ளது. தண்ணீர் அதிகமானதால் கோவிலை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அச்சமடைந்த உரிமையாளர்கள் ஆடுகளை துாக்கிக்கொண்டு கரைக்கு ஓடினர்.

‘பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், யாரும் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம்’ என, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அப்பகுதி மக்களிடம் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்தினார்.
Be First to Comment