கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் அன்று சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக வரும் 31ம் தேதி கடை அடைப்பு என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அவ்வமைப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் கடையடைப்பு வணிகர்களையும், பொதுமக்களையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பொது பந்த் தேவைப்படும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், தற்போது அறிவித்துள்ள பந்த்தை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பந்தில் வணிகர் சங்கங்கள் கலந்து கொள்வதில்லை எனவும், அந்த நேரத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
Be First to Comment