கோவை மாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படித்து வரும் இரு சகோதரர்கள், கையில் தேசிய கொடி ஏந்தி, ஸ்கேட்டிங் செய்தபடி மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவையை அடுத்த குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன்கள் முரளிதரன்,கவின்தரன். மாதம்பட்டி அரசு பள்ளியில் எட்டாவது மற்றும் நான்காவது படித்து வரும் இரு சிறுவர்களும் ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில,தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றும், மேலும் பல உலக சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளனர்.

இந்நிலையில், தற்போது தடை செய்த நெகிழிகளை பயன்படுத்தாதீர் எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை 75 நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படுத்தும் விதமாக கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். மூன்று நாட்கள் இந்த பயணத்தை தொடர உள்ள நிலையில் முதல் நாள் மாதம்பட்டியில் துவங்கி பேரூர் வரை ஸ்கேட்டிங் செய்து சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் இருவரும் ஸ்கேட்டிங் செய்து சென்றதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

பசுமைக்கு எதிரியாக உள்ள பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே இந்த ஸ்கேட்டிங் பயணத்தை நடத்துவதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
Be First to Comment