கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாம்புக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி, மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வுகள் அடங்கிய கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரையிலும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர்.பெரும்பாலும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், விவசாயிகளும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி சமூகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பாம்புக்கடி குறித்து முறையான விழிப்புணர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாக உள்ளது.இந்த சூழலில் பாம்புக்கடி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி.

கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விஷப்பாம்புகளின் வகைகள், பாம்புக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் அதற்கான உரிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர், பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இந்த சூழலில், கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் மலைக்கிராம பழங்குடியின அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஊரகப்பகுதிகளில் பாம்புக்கடி பிரச்சனை அதிகம் என்பதால் சாலைகளே இல்லாத மலைக்கிராமங்களுக்கும் பயணித்து இந்த விழிப்புணர்வை செய்துவருகிறார்.மேலும், விஷப் பாம்புகளின் வகைகள், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய மருத்துவ முதலுதவிகள் அடங்கிய புத்தகப்பை, பேனா, பென்சில், பாக்ஸ் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பாம்புக்கடி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தியாவை பாம்புக்கடியில் இருந்து பாதுகாப்பான நாடாக உருவாக்குவது தனது பணி என்கிறார் ஆராய்ச்சியாளர் சக்திவேல் வையாபுரி. கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சமூக சேவகராக மலை கிராமங்களில் பணிபுரியும் சதீஷ் என்பவர் சக்திவேல் வையாபுரியின் இந்த சேவைக்கு உதவியுள்ளார்.

பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வு சேவை புரியும் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். பாம்புக்கடி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சக்திவேல் வையாபுரி.பாம்புக்கடி ஆராய்ச்சியாளரான இவர் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.கோவை, ஈரோடு மாவட்டங்களில் பழங்குடியின அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாம்புக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய புத்தகப்பை, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
Be First to Comment