வேகமாக உள்ளே நுழைந்த குறிச்சியார் எதிர்ப்பட்ட நிருபர் ஒருவரிடம், ”ஏப்பா! வெயில் இந்தப் போடு போடுதே… ஜூன் மாசம் வரைக்கும் இந்த ஆபீஸை ஊட்டி-கொடைக்கானல் என்று மாற்றிவிட்டால் எப்படி இருக்கும்?” என்று கேட்க…
அதைக் காதில் வாங்கிக்கொண்டே அருகில் சென்ற நாம், ”ரொம்ப பெரிய பெரிய ஐடியாவெல்லாம் கொடுப்பதாக நினைப்போ… வாங்க, உள்ளே ஜிலீரென்று லஸ்ஸி வாங்கி வைத்திருக்கிறோம் உங்களுக்கு!” என்று அழைத்தோம். கண்களில் சந்தோஷ பல்பு எரிய, நம்மோடு வந்து அமர்ந்தார் குறிச்சியார்.
”அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது துட்டு விஷயத்தில் கோவையில் கொடி கட்டிப் பறந்த சிலர், இப்போது தி.மு.க. பக்கம் வந்துவிட்டார்கள். கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பணிகளில் இடைத்தரகர், பழைய ஆட்சியில் நடத்திய அதே டெக்னிக்குகளை தி.மு.க-வில் செல்வாக்குள்ள சிலர் மூலம் மறுபடியும் அரங்கேற்ற ஆரம்பித்திருப்பதாக முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது. அதெல்லாம் தெரிந்தும் தி.மு.க. ஆட்சியில் எப்படி அவர்களை அனுமதிக்கிறார்கள் என வேதனையுடன் புலம்புகின்றனர் ஆட்சி நிர்வாகத்தின் மீது அக்கறை கொண்ட சிலர்!”
”இதென்ன புது கலாட்டா?”
ஆமாம் நிலைமை அப்படிதான் போய் கொண்டிருக்கிறது. இவர்களின் தில்லு முல்லுகள் விரைவில் வெளி வரும் என்கின்றனர் உள்ளூர் உ.பி-க்கள். அதுமட்டுமல்லாமல் சில மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்யாததால் பொதுமக்களுக்கும் பாதிப்புக்குள்ளாகின்றனராம்.
”விரிவாக கூறும்”

குறிச்சி 98வது வார்டு போத்தனூர் பகுதியில் உள்ளது ”கோவை மாநகராட்சியின் பெண்கள் பொது கழிப்பிடம்”. தேர்தல் முடிந்தது முதல் இந்த கழிப்பிடம் சுத்தம் செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனராம் அந்த பகுதி பெண்கள். சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கழிப்பிடத்தைதான் பயன்படுத்துகின்றனராம். இந்நிலையில் கடந்த சில மாதங்களால் கழிப்பிடம் பராமரிப்பின்றியும், சரிவர சுத்தம் செய்யாததாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக சங்கடப்படுகின்றனராம் அப்பகுதி பெண்கள். இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமாரிடம் புகார் செய்துள்ளனராம்.
”என்ன சொன்னாராம்”
”அந்த பகுதி கழிப்பிடத்தை கான்ட்ராக்ட் எடுத்தவர் சரிவர பராமரிக்காமல் உள்ளார். வரும் மாதத்தில் இருந்துதான் அவரது ஒப்பந்தம் முடியவுள்ளது. அதன் பிறகு டெண்டர் விட்டு முறையாக பராமரிக்கப்படும். இதற்கிடையில் நானே முன்னின்று சுத்தம் செய்வதற்கான பணிகளை பார்வையிடுவேன்” என்று கூறியுள்ளாராம்.
”நடக்குமா?”
அது நடந்தால் நல்லதுதானே, குழந்தைகள் மற்றும் பெண்கள் கழிப்பிடம் செல்ல இவ்வளவு கஷ்டப்படுகிற நிலைமையில்தான் இன்னும் நாம் இருக்கிறோம் என்று வேதனையுடன் அந்த பகுதி மக்கள் கூறிய கருத்துதான் அனைவரையும் தற்போது யோசிக்க வைத்துள்ளதாம்.
”அது என்ன?”
”தி.மு.க ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக கோவையில் மேயர் பெண்தான், அதுமட்டுமின்றி ஐந்து மண்டலங்களில் நான்கு மண்டல தலைவர்களும் பெண்கள்தான். இப்படியான நிலையில் பெண்கள் கழிப்பிடம் செல்வதற்கு இன்னும் கோரிக்கை வைக்க வேண்டிய நிலைதானே உள்ளது” என்று மிகவும் வருந்துகின்றனராம் அப்பகுதி பெண்கள்
குறிச்சியாருக்கு இன்னொரு லஸ்ஸியை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொடுத்தோம். குடித்த முடித்தவர், சற்றும் எதிர்பாராத வகையில்,
”வெயிலுக்கு இதமாக நீ தருவதையெல்லாம் குடித்துவிட்டு உடம்பு ஜலதோசம் பிடித்துவிட போகிறது” என்றார் அச்சத்துடன்.
”இதற்கெல்லாம் பயப்படுவது?”
மருத்துவமனை செல்வதென்றாலே பயமாகத்தானே உள்ளது. உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மீது புகாரளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார் ஒரு பெண்.
திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீனா தனது அம்மாவை கடந்த 2020ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம். அங்கு அவரது தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அம்மாவின் உடல் உறுப்புகளை திருடி விட்டதாக சந்தேகம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேலும் இவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தியது.

”ஆமாம்”
இந்நிலையில் தான் அளித்த புகாருக்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்துள்ளாராம். அதுமட்டுமின்றி அம்மருத்துவமனையில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் பகீர் குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
”ஓகோ”
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மருத்துவமனைக்கு பக்கபலமாக இருக்கிறார்களாம். கட்சி பெயரை பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் நபர்கள். அவர்களைதான் இடைத்தரகர்கள் என்று நான் ஆரம்பித்திலேயே சொன்னேன். அவர்கள்தான் மருத்துவமனைக்கு எதிராக எதுவும் நடந்திடாதவாறு அரசியல், அதிகாரிகள் என பலதரப்பையும் கவனிக்கும் வேலையை செய்கின்றார்களாம்.
”அப்ப மருத்துவமனை மீது நடவடிக்கை?”
சில நாட்களுக்கு முன்னர்தான் வேறொரு பிரச்சனையில் அபராதம் விதிக்கப்பட்டதாம் மருத்துவமனைக்கு. இனிமேல்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மருத்துவமனை மீது எடுக்கப்படும். அதற்கான ஆதாரங்களைதான் நாங்கள் சேகரித்து வருகிறோம் என்கின்றார்கள் அதிகார வட்டாரத்தில். இதையறிந்து பயத்தில் உள்ளனர் தவறு செய்தவர்கள்.
-அதுமட்டுமில்ல ‘இனிதான் பயங்கரமா இருக்கும்’ என்று விஜய் ஸ்டைலிலேயே விடைபெற்றார் குறிச்சியார்.
Be First to Comment