கேரளாவின் பாலக்காடு அருகே பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் குடும்பம் நடத்தி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உளள்து. 11 ஆண்டுகளாக மாட்டாத இந்த காதல் ஜோடி, வீட்டில் வரண் பார்க்க தொடங்கியதால் 3 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிக்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அயலூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதன் என்பவரது மகள் சஜிதா கடந்த 2010-ம் ஆண்டு காணாமல் போனார். இதுபற்றி போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவை கண்டுபிடிக்க போலீசாரால் அப்போது முடியவில்லை.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய சஜிதா, தனது வீட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரம் தள்ளி உள்ள தனது காதலன் ரஹ்மான் (34) வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் காதலியுடன் வாழ்வதற்காக ரஹ்மான் செய்த வேலை தான் யாரும் செய்யாத தில்லாங்கடி ரகம்..

குடும்பத்தினருக்கு தெரியாத வகையில் வீட்டில் தன்னுடைய அறை யில் காதலியோடு வாழ முடிவு செய்திருக்கிறார். ஏனெனில் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். பெற்றோர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைத்து அந்த முடிவை செய்திருக்கிறார்.
தனது காதலி சஜிதாவை தனது அறையில் தங்க வைத்த ரஹ்மான், தனது அறைக்குள் தன்னை தவிர யாரும் வராத அளவிற்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தனது குடும்பத்தினருடன் சாப்பிடாமல், காதலியுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறார். தனக்கு அளிக்கும் உணவையே காதலிக்கும் கொடுத்திருக்கிறார். தான் இல்லாத சமயத்தில் தன்னை தவிர வேறு யாரும் கதவை தொட முடியாத வகையில் எர்த் பூட்டை மாட்டி உள்ளார். இதனால் யாரும் தொடுவது கிடையாது.
வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் வீட்டின் ஜன்னல் கம்பி வழியாக வரும் வகையில் ஜன்னல் கம்பிகளை கழட்டி மாட்டும் வகையில் வடிமைத்திருக்கிறார். இதன்படியே இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று வந்துள்ளார்கள். இப்படியே இவர்கள் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மானுக்கு வரண் தேடி உள்ளார்கள். இதனால் தனது காதலியை அழைத்துக் கொண்டு வேறு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த ரஹ்மானை அவரது சகோதரி பார்த்துள்ளார். இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரை ஏற்று நென்மாரா போலீசார் விசாரித்துள்ளார்கள். பின்னர் ரஹ்மானையும், அவரோடு வாழ்ந்து வந்த சஜிதாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போதுதான் இருவரும் 11 ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. சஜிதாவும் அவரோடு வாழ விரும்பியதால் தம்பதியை சேர்ந்து வாழச் சொல்லி நீதிமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது.
அப்போது தம்பதியாக சேர்ந்து வாழ இருவரும் விருப்பம் தெரிவித்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த சூழலில் நென்மாரா சார் பதிவாளர் அலுவலகத்தில் ரஹ்மானும் சஜிதாவும் நேற்று முன்தினம் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். நென்மாரா எம்எல்ஏ பாபு மணமக்களை நேரில் வாழ்த்தினார். இந்த திருமணத்தில் சஜிதாவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ரஹ்மான் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை.

புதுமண தம்பதி ரஹ்மான், சஜிதா கூறும்போது, “இன்றுமுதல் சட்டபூர்வமாக வாழ்க்கையை தொடங்குகிறோம். அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை பயணத்தை தொடருவோம்” என்று தெரிவித்தனர்.
எம்எல்ஏ பாபு கூறும்போது, “புதுமண தம்பதி தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது அவர்களின் கனவு. இதை நிறைவேற்ற உதவி செய்வேன்” என்றார்.
Be First to Comment