தமிழகத்தில் பேருந்து, மின், பால் விலை உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு ஆட்சியில் இல்லை என்றால் ஒரு பேச்சு என நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் 16 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டனர். காரணம் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இதனை அரசு ஊழியர்கள் மிகவும் நம்பினார்கள். திமுக அவர்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துள்ளது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை மறந்துவிட்டது” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பல்வேறு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். இதனால் இன்னும் கூடுதல் செலவாகும். ஆகவே விரைவில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவார்கள்.
அதுபோன்று மின் கட்டணத்தையும் உயர்த்துவார்கள். காரணம் அத்தனையும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பால் விலையையும் உயர்த்த போகின்றனர்” என்று கூறினார்
Be First to Comment