குறிச்சி குளக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ‘குறிச்சி’ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் இளைஞர்கள் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், போதிய காவலர் இல்லாத பள்ளி என்பதால், இரவு நேரங்களில் வளாகத்திற்குள் நுழைந்து, மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை ஊசி போடுதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பயன்படுத்திய ஊசிகள், மது பாட்டில்கள், உணவு பொட்டலங்கள் போன்றவற்றை வளாகத்திற்குள்ளேயே எறிந்து விட்டு செல்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியவதில்லை. இது குறித்து, காவல் நிலையத்தில் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ரொம்ப நாளாகவே இந்த மாதிரியான செயல்களில், ஒரு சில இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பதை, போலீசாரும் கல்வி அதிகாரிகளும் தடுக்க வேண்டும்’ என்றும், குறிச்சி பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததும் இது போன்ற செயல்களுக்கும் மிக முக்கிய காரணம் என்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குறிச்சி பள்ளியை பார்வையிட்ட பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ”இன்னும் ஒரு வாரத்தில் அரசு மற்றும் தன்னார்வு அமைப்புகள் உதவியுடன் பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து தருவேன்” என உறுதியளித்து சென்றவர்தான் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குறிச்சி பள்ளி இருக்கும் வார்டில் போட்டியிட்டு வென்றவர்தான் தற்போதைய தெற்கு மண்டல தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிச்சி பள்ளிக்கு சுற்றுசுவர் அமைந்தால் குற்றங்கள் குறையும்!
Be First to Comment