கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விற்பனைக்கு வருவதாக கூறி சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி வருவதாக அக்கல்லூரி நிர்வாகத்தினர், செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கற்பகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மேலாளர் சிவக்குமாரை தொடர்பு கொண்ட ஒருவர் கல்லூரி விற்பனைக்கு உள்ளதாக இரண்டு பேர் கூறியதாகவும், விலை குறித்தும் பேசி உள்ளார். இதையடுத்து உடனடியாக சிவக்குமார் செட்டிபாளையம் உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு தகவல் அளித்துள்ளார். மேலாளரிடம் பேசிய அந்த செல்போன் எண்ணை வைத்து அவரை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து விற்பனை உள்ளதாக கூறியவர்களை பிடிக்க, கல்லூரியை வாங்குவது போல் கூறி மருத்துவமனை மேலாளர் சிவக்குமார், மற்றும் போலீசார் செட்டிபாளையம் ஜே.ஜே நகர் பகுதிக்கு அந்த இருவரை அழைத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த இரண்டு பேர் கற்பகம் கல்லூரி மருத்துவமனை மொத்தமாக ரூ.2,450 கோடி என்றும் ரூ.800 கோடி ரூபாய் வெள்ளையாகவும், ரூ.1,650 கோடி பணத்தை கருப்பு பணமாக தர வேண்டும் என கூறி உள்ளார். இதையடுத்து சிவக்குமார் தான் மருத்துவமனை மேலாளர் என கூறி யார் விற்பனை செய்கிறார்கள் என கேட்ட போது சுதாரித்துக்கொண்ட இருவரும் சிவக்குமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து மறைந்திருந்த போலீசார் இருவரை பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் கோவை பீளமேடு சாஸ்திரி வீதியை சேர்ந்த சங்கர் (49), துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலணியை சேர்ந்த ராமச்சந்திரன் (54). என்பதும், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் கற்பகம் மருத்துவக்கல்லூரியின் இணைய தளத்தில் உள்ள தகவல்களை கொண்டு பல்வேறு நபர்களிடம் தங்களுக்கு கல்லூரி இயக்குநர்களை நன்றாக தெரியும் என விலை பேசியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Be First to Comment