தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் விழாவை விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பட்டின பிரவேசம் என்று பெயரில் இவரை பல்லாக்கில் தூக்கி செல்லும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே 22ம் தேதி இந்த நிகழ்வு நடக்க உள்ளது. இதை விசிக, திக எதிர்த்த நிலையில் கோட்டாச்சியார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தேவையில்லாத சம்பிரதாயம். மனிதர்கள் எல்ல்லோரும் சமம். ஒருவர் இன்னொருவரை தூக்குவது ஏற்றத்தாழ்வை குறிக்கும். அதனால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிகவினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆதீனம் மாசிலாமணி கண்டிப்பாக பல்லக்கில் ஏறுவார்.. முடிந்ததை பாருங்கள் என்று பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகாமன்னார் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதில், பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. இதை யாராலும் தடுக்க முடியாது. எந்த அமைப்பிற்கும் அந்த அருகத்தையும் கிடையாது. அரசுக்கும் அந்த அருகதை கிடையாது.
முடிந்தால் இந்த பட்டினப் பிரவேசத்தை தடுத்து பாருங்கள். யாராலும் முடியாது. இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும்.. எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.. கடுமையான எச்சரிக்கை விடுகிறேன், என்று கூறி இருந்தார். ஜீயர் ஒருவர்.. ஆளும் கட்சி அமைச்சர்கள் பற்றி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்த மன்னார்குடி ஜீயருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அதில், ஆட்சியதிகாரத்தையும் எச்சரிக்கக் கூடிய ஆற்றல்மிக்க அதிகாரம் கோவில், மடம் ஆகியவற்றின் கருவறைக்கே உள்ளது என்பதை திருமிகு ஜீயரின் கர்ச்சனை உணர்த்துகிறது. ஜனாதிபதியின் அதிகாரத்தைவிடவும் மடாதிபதியின் அதிகாரமே இங்கு மகாபெரியது.
இதுதான் சனாதனத்தின் வல்லமை, என்று திருமா காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் இடையே ஜீயரின் கருத்து கொதிப்பை ஏற்படுத்தி உளது. ஜீயரால் இப்படி வேறு ஆட்சியில் பேச முடியுமா? திமுக என்றதும்தான் இப்படி மோசமாக விமர்சனம் வைக்கிறார். ஆனால் அவரை அரசு கண்டுகொள்ளவே இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Be First to Comment