Press "Enter" to skip to content

மதத்தை சொல்லி குற்றம் சாட்டுவது, தலைவருக்கு அழகா? – ஈஸ்வரன் கேள்வி!

“பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, அறிக்கையை வெளியிட்டுள்ளார், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன். அதில்,” கோவையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தவர்கள் அவருக்கு துணை போனவர்கள் என அனைவரையும் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.” எந்த ஒரு அப்பாவி உயிரையும் கொல்லுகின்ற மனம் படைத்தவன் மனித ஜென்மமே இல்லை.”கோடிக்கணக்கானவர்கள் உள்ள ஒரு மதத்தில் ஒரு சிலர் செய்கின்ற இந்த பைத்தியக்காரத்தனம், அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தினரையும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரையும் பதட்டத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது, குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்புகள் கண்டறியப்பட வேண்டும்.

“தீவிரவாத நடவடிக்கைகள் மற்ற பகுதிகளுக்கும் தொடராதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத தீவிரவாதம் என்று அறிவிக்காமலேயே மேற்கண்ட நடவடிக்கைகளை பலமாக எடுத்து விட முடியும். வெளியிலே படம் போட்டுவிட்டு, உள்ளே ஒன்றும் செய்யாமலும் விட்டுவிட முடியும். மத தீவிரவாதம் என்று குண்டு வெடித்த உடனேயே அந்த தீவிரவாதிகள் வேண்டுமானாலும் அறிவிப்பார்கள்.அது வேறு.! ஆனால் ஒரு அரசோ ஒரு அரசியல் இயக்கங்களோ அறிவிக்குமானால் உடனடியாக மதக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் பதட்டம் அடையும் சூழ்நிலையும் ஏற்படும். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அன்று மாலை வரை அந்த மாவட்ட ஆட்சியர் விபத்து என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அன்று மாலையே அரசு தரப்பில் அது தீவிரவாத நடவடிக்கை என்று சொன்ன பிறகு மிகப்பெரிய கலவரம் உருவாகி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.”

“ஆனால் அந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று அறியப்பட்டவர்கள் பெரும்பாலானவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இன்றும் பலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.குற்றவாளிகள் தப்பித்து அப்பாவிகள், சம்பந்தமில்லாதவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்கள். இதனால் என்ன பலன் ? இதைப்போலவே இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் நாடு முழுவதும் கலவரம் பரவி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், அந்த அப்பாவி சீக்கியர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?” அவசரமும், ஆவேசமும் கொண்ட பொதுமக்களிடம் தீவிரவாதம் என்று உடனடியாக அறிவிப்பதால் கலவரம் ஏற்பட்டு, மக்கள் உயிரிழப்பு ஏற்படுமானால் அதற்கு யார் பொறுப்பு ?

“மக்களின் உயிரை விட சம்பவத்தை அறிவித்து ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியின் மேல் குற்றம் சாட்டுவது தான் முக்கியமா ? ஒரு பெரிய தலைவர் இறந்தால் கூட உடனடியாக அறிவித்தால் கலவரம் நடந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் காலதாமதம் செய்து அறிவிக்கிறார்களே ! இதில் என்ன தவறு இருக்க முடியும் ? மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதை விட தீவிரவாத செயல் என்று அறிவிப்பது தான் முக்கியம் என்று கருதுகிறீர்களா ? தமிழக காவல்துறையை தாழ்த்தி பேசி தேசிய புலனாய்வு முகமை தான் உண்மையான மக்கள் பாதுகாவலன் என்பதைப் போல பேசுகிறீர்கள். ஆனால், தேசிய புலனாய்வு முகமை ( NIA ) மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் இருக்கிறதே ?

“அசாமில் அகில் கோகாய் என்ற மக்கள் போராளியை, சுற்றுச்சூழல் போராளியை மாவோயிஸ்ட் தொடர்பு இருக்கிறது, நக்சலைட் தொடர்பு இருக்கிறது, என்று குற்றம் சாட்டி (UAPA) சட்டப்படி வழக்கு பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அவரை சிறையில் அடைத்தது. 19 மாதம் சிறை தண்டனை பெற்ற பிறகு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்தது. அவர் சிறையில் இருக்கும் போதே சுயேட்சையாக அசாம் சட்டமன்றத் தேர்தலில் (2011) போட்டியிட்டு பாஜகவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்பதிலிருந்து அவர் மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்பதை அறிய முடிகிறது. மேலும் பாஜக செய்தது மக்கள் விரோத செயல் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.”

“அகில் கோகாயை கைது செய்து அவரின் தேசவிரோத நடவடிக்கையை விசாரிக்காமல் RSS லும் BJP யிலும் சேர்ந்தால் பத்து நாளில் விட்டு விடுகிறோம். இல்லையெனில் 10 வருடம் சிறையில் இருக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) மிரட்டியதாக அவரே தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு முகமையை (NIA) மத்திய அரசு தன்னுடைய அரசியல் நலனுக்காக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டுகிறார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரணை நடத்தும் என எப்படி நம்புவது ? தமிழகத்தில் நடந்த சம்பவத்தை உளவுத்துறை செயல் இழப்பு என்று சொல்கிறீர்கள் ?”

“குஜராத்தில் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்று மோடி அவர்களே அறிவித்தார். சுமார் 500 பேருக்கு மேலாக திரண்டு அதுவும் காலதாமதமாக வந்த ரயிலை நிறுத்தி தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதை தடுக்க தவறியது குஜராத் உளவுத்துறையின் மாபெரும் தோல்விதானே? இந்த படுகொலைகளுக்கு மோடி அவர்கள் தான் பொறுப்பா ? அதன்பின்பு 2008 ஆம் ஆண்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 17 இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வைத்து 59 இந்துக்களை கொன்றார்களே ? இந்து மக்களுக்கு பாதுகாப்பு தரத்தவறிய மோடி என்று குற்றம் சாட்டலாமா ? அன்று மோடி அவர்களின் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது ?அகமதாபாத்திலும், பெங்களூரிலும் குண்டு வெடித்த போது அங்கே இருந்தது பாஜக அரசு.அந்த இரண்டு அரசும் மத்திய அரசால் கலைக்கப்பட்டதா ? அல்லது அவர்கள் ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார்களா ?”

“மத்தியில் பாஜக அரசு இருந்தபோது 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அதில் ஏழு பேர் கொல்லப்பட்டார்களே, அதற்கு பொறுப்பேற்று அன்றைய பாஜக அரசு ராஜினாமா செய்ததா ? இந்தியாவை பாதுகாக்க தவறிய பாஜக அரசு என்று குற்றம் சாட்டலாமா ? தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரிகளை குறை சொல்வது உங்கள் உரிமை, விருப்பம். ஆனால் அவர்கள் சார்ந்த மதத்தைச் சொல்லி குற்றம் சாட்டுவது ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு தரம் அல்ல என்பதை புரிந்துள்ளீர்களா ? இதைக் கேட்கும் அந்த மதத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் கூனிக்குறுகி வெட்கி தலைகுனிவார்களே ? இந்த நாட்டில் இரண்டாம் தர குடிமக்களா நாங்கள் என்று பதட்டமடைவார்களே ! இப்படி சாதாரண மனிதர்களை புண்படுத்தி மகிழ்ச்சி அடைகிறீர்களா ? இந்த பேச்சு சமீபத்தில் வெறுப்பு பேச்சு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்பதை உணர்ந்து உள்ளீர்களா ?ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கான செயல்பாடுகளுக்கு முழு உரிமை உண்டு அதே நேரத்தில தான் பேசுகின்ற வார்த்தைகளால் ஒரு உயிர் கூட பறிபோகக்கூடாது என்ற மனித நேயமும் வேண்டும்.” என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டுள்ளார்.”

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks