மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் அறையின் முன்பு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேயர் இந்திராணி மற்றும் அவரது கணவர் பொன்வசந்த் மீது கட்சித் தலைமை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றவுடன், மேயர், துணை மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி என இரண்டு அமைச்சர்களை கொண்ட மாவட்டமாக உள்ளதால், மேயர் தேர்வில் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில், ஒரு படி முன்னேறி பெரும்பாலானோர் கூறியபடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேர்வு செய்த 57வது வார்டு கவுன்சிலர் இந்தியாணியை கட்சித் தலைமை மேயராக தேர்வு செய்தது.

சில நாட்களில் மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் விமானநிலையத்தில் வரவேற்ற போது மேயர் இந்திராணி மட்டும் வரவில்லை. இது பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, முதல்வரை சென்னை சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் இந்திராணி.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளில் கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை மீறி செயல்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அமைச்சர் பிடிஆரின் முழு ஆதரவு உள்ளதால் மேயர் இந்திராணியின் கணவர் மாநகராட்சி பணிகளில் தலையிடுவதோடு, ஆக்டிவ் மேயராகவே வலம் வருவதாக கூறப்படுகிறது.

இப்படி மேயர் இந்திராணி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை. இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற அதிமுக கவுன்சிலர்களை பின் தொடர்ந்து செய்தியாளர்கள் சிலர் செய்தி சேகரிக்கச் சென்றனர். அப்போது மேயர் அறையின் முன்பு இருந்த திமுகவினர் சிலர் பத்திரிகையாளர்களை தாக்கியதோடு, கேமராக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. பின்னர் அங்கு வந்த மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் செய்தியானதை தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தில் மேயர் இந்திராணி வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரம் திமுகவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் பேசி வருகின்றனர்.
இதனால், தொடர் சர்ச்சையில் சிக்கி கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் மேயர் இந்திராணி மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மேயரை மாற்றலாமா? அதற்கான நடவடிக்கைகள் என்ன என்று கட்சித் தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக திமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
Be First to Comment