உள்ளாட்சி மன்றங்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லாத காரணத்தால், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் 94 முதல் 100 வரையிலான அனைத்து வார்டிலும் பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி வருவதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி உடனடியாக கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டுமென கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் இன்று தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தனது அறிக்கையில், ”ஆண்டுகள் கடந்தும் குறிச்சி பகுதியில் அனைத்து வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளினால் சாலைகள் சரிசெய்யபடாமல் விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அனைத்து தெருக்களும் குண்டும் குழியுமாய் உள்ளதால் போக்குவரத்துக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் மேலும் பாதிப்படைந்து பல விபத்துக்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.”
”வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. 99வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் துர்நாற்றம், ஈ தொல்லை, கொசுத் தொல்லை அதிகமாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நிலத்தடிநீர் பெருமளவில் பாதிப்படைந்து உபயோகமில்லாத நிலையில் உள்ளது. அதனால் குப்பைக் கிடங்கு பராமரிப்பில் அலட்சியம் காட்டாமல் முறையாக பராமரிப்பு செய்து பொதுமக்களை பாதிப்பிலிருந்து காத்திட வேண்டும்.”
”குறிச்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தில் கால இடைவெளி அதிகமாக இருந்து வருவதால் அதனை முறைப்படுத்தி சரிசெய்து 3 நாட்களுக்கு ஒரு முறையேனும் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிச்சி ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்புதண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்து பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் விநியோகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”

”குறிச்சியின் அனைத்து வார்டுகளிலும் முக்கிய சாலைகளில் மட்டுமே தெருவிளக்குகள் பராமரிக்கப்படுகிறது. ஊருக்குள் இருக்கும் தெருக்களில் பல மாதங்களாகியும் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக குறிச்சி பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் நித்தமும் அறங்கேறி வருகிறது.”
”அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாகி விட்டது. அதன் காரணமாக வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
”கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம்நகர் பகுதிகளில் பன்றித் தொல்லை அதிகம் உள்ளதால் அதற்கு தீர்வுகாண வேண்டும்.”
”ஆறுகவுண்டர் வீதியில் சாக்கடை கழிவுநீர் மாதக்கணக்கில் சாலைகளில் வழிந்தோடுகிறது. பலமுறை முறையிட்டும் நிரந்தர தீர்வுகாணாமல் தொடர்கதையாகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரப் பணியாளர்களால் முறையாக குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடைகள் தூர்வாராபடாமலும் மக்களின் சுகாதரம் பாதிக்கப்படுகிறது.”

”95வது வார்டில் குறிச்சியிலிருந்து காந்திஜி ரோடு முழுவதும் 2 ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்து தரவேண்டும். மாசடைந்து கிடக்கும் குறிச்சி மயானத்தை சுத்தம் செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆத்துப்பாலம் பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக விளங்கும் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.”
திருமறைநகர், ஆத்துபாலம் தர்கா லைன், கே.ஏம்.காலணி சாலைவசதி, தெருவிளக்குகள் ஏரிவதில்லை, மற்றும் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் முறைப்படுத்த வேண்டும்.
கோவை சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை செல்லம் செல்லும் சாலை, பிள்ளையார்புரம், ஜி.டி.டேங்கிலிருந்து வெள்ளலூர் செல்லும் சாலைகள் பயன்படுத்த முடியாத உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. “
இதுபோன்ற மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.” என கூறியுள்ளார்
ஆர்பாட்டத்திற்கு தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி இ.நிசார்அகமது வட்டச் செயலாளர்கள் கே.கண்ணாமணி, ஆர்.ரமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, பி.முரளிதரன், நிர்வாகிகள் ஏ.காஜாகான், வானவில் கனகராஜ், எம்.கோவிந்தராஜ், இ.எம்.அனிபா, தங்கமணி, பிரேம்குமார், லட்சுமி, மஞ்சுளா, சானவாஸ், உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment