மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கு பத்தாயிரம் பிரத்யேக மார்பு கச்சைகள் இலவசமாக வழங்கும் திட்டம் கோவையில் துவங்கப்பட்டது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக மார்பக கச்சையை இலவசமாக வழங்கும் விதமாக, ரோட்டரி மாவட்டம் 3201-ன் சார்பாக புற்று நோயிலிருந்து விடுதலை எனும் திட்டத்தை துவக்கியுள்ளனர்.
இந்த சிறப்புத்திட்டத்தில் கோவை கேலக்ஸி சங்கமும், நாயுடு ஹால் நிறுவனமும் இணைந்து பத்தாயிரம் இலவச மார்பக கச்சை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக செயல் பாட்டாளரும், திரைப்பட இயக்குனருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்களுக்கு இலவச மார்பக கச்சைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3201-ன் முதன்மைப் பெண்மணி திருமதி சாந்தி இராஜசேகர், நாயுடு ஹால் நிறுவன அதிபர் வேணுகோபால், கே.எம்.சி.எச். மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர். தவமணி பழனிசாமி, கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவர் கற்பகம் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மார்பக புற்று நோயிலிருந்து மீள்வதற்கும், மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
பிரத்யேக மார்பு கச்சைகள் மருத்துவமனைகள் வாயிலாகவும் ,ரோட்டரி சங்கங்கள் மற்றும் நாயுடு ஹால் ஷோரூம்களிலும் இலவசமாக கிடைக்கும் எனவும் மேலும் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் ரூபாய் 3,500 க்கு செய்யப்படும் மார்பக புற்று நோய் பரிசோதனை ரூபாய் ஆயிரம் ரூபாய்க்கு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment