கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதையொட்டி மக்கள் பலரும் மனு அளிக்க வருவர்.
இந்நிலையில் மனு அளிக்க வந்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கெளரி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து அப்பெண் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாலாஜி க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது சிறிது காலத்திற்கு முன்பு தான் தெரிய வந்தது எனவும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பாலாஜியின் உறவினர்களிடம் கேட்டபோது அவர்களும் தன்னை மிரட்டுவதாக தெரிவித்தார்.

திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Be First to Comment