Press "Enter" to skip to content

“முதலமைச்சர் தமிழ்நாட்டுக்காரர் இல்லை” – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ’21-ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,’பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நிறுவனர் அவிநாசிலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும்.

பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது ஆய்வில் தெரியவந்தது. பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது.பெண்கள் பள்ளிக்கு வந்து சுகாதாரமான முறையில் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை நாம் சரி செய்ய வேண்டும்.தற்போது கல்லூரி படிப்புகளுக்கு ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்கின்றனர். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை பொருத்தவரை தொழில் சார்ந்த படிப்புகளை தவிர்த்து விட்டு கலை மற்றும் அறிவியல் துறைகளை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இது பிற்காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கைக்கு உதவும் என நம்புகின்றனர். எனவே ஆராய்ச்சி மற்றும் தொழிற்சார்ந்த துறைகளையும் பெண்கள் தேர்வு செய்து முன்னேற வேண்டும்.

இந்த சூழலில் பாரத பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு தடையாக இருந்த இளம் வயது திருமணம் பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளை சிறுவயதில் இருந்து வித்தியாசத்தோடு வளர்ப்பதை கைவிட வேண்டும். எனது குடும்பத்தில் எனது பெற்றோர்கள் எனக்கு எல்லாவித உரிமையையும், சுதந்திரத்தையும் வழங்கினார். நான் திருமணம் ஆன பின்பு எனது மருத்துவ படிப்பை முடித்தேன். இதற்கு காரணம் எனது குடும்பத்தினர் தந்த ஊக்கம். எனவே பெண்கள் முன்னேற்றத்திற்கு குடும்பத்தினரின் ஊக்கம் அவசியமாகும். இதுபோன்று பெண்கள் உயர்கல்வி கற்பதில் உள்ள தடைகள் பிரச்சனைகள் அனைத்தும் களையப்பட வேண்டும். குறிப்பாக பெண்களின் மனதில் மாற்றம் வர வேண்டும். அவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

எந்த விமர்சனமும் உறுதியான முன்னேற்றத்தை தடுக்க முடியாது. அந்த வகையில் பெண்களுக்கு துணிச்சல் இன்றைய சூழலில் அவசியமாகும். இவை தவிர பெண்களின் உயர்கல்வியை பாதிப்பதில் முக்கிய பங்கு வறுமைக்கு உண்டு. பாரத பிரதமர் அவர்கள் முன் வைத்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் பாலின வேற்றுமை களையப்பட்டு பெண்கள் கல்வி அறிவு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவரும் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்திட வேண்டும். சிலர் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில், மொழி திணிக்கப்படுவதாகவும் குலக்கல்வி ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்திட்டம் மாணவர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறது. தாய்மொழி கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. 100% பெண்கள் படித்திருப்பதை உறுதி செய்வதோடு 50% பெண்கள் உயர்கல்வி பெறுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது.

அரசியலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக பாரத பிரதமர் அவர்கள் நமது நாட்டின் நிதி அமைச்சர் பொறுப்பையும், வெளி விவகாரங்கள் துறை அமைச்சகத்தையும் பெண்களிடம் வழங்கி சிறப்பித்தார். அதேபோல் அவர்களும் தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளனர்.பெண்களாக இருப்பதால் நமக்கு கட்டுப்பாடுகளும் உள்ளது. குறிப்பாக ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு அவசியமாகும். நாகரீகம் என்பது நாம் உடுத்தும் உடையில் அல்ல நமது அறிவின் வளர்ச்சி தான் நாகரீகமாகும்.மேலும் நமது கலாச்சாரத்தை உலகில் எங்கு சென்றாலும் நாம் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் அவர்களுக்கென ஒரு குறிக்கோள் வைத்து அதில் முன்னேற வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டும்.நமது அரசு டிஜிட்டல் இந்தியா, முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அரசு வழங்கும் கடன் உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாரத பிரதமர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடும் இந்த சூழலில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் உயர்கல்விக்கான கண்ணோட்டத்தில் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவின் மூலம் பல துறைகளில் சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. எனவே நாள்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவு அவசியமாகும்.எந்த விதத்திலும் தற்கொலை குறித்த எண்ணம் வரவே கூடாது. மன உறுதியோடும், தைரியத்தோடும் கம்பீரமாக நமது வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். நமது கலாச்சாரத்தோடு சேர்ந்த வளர்ச்சியை நாம் பெற வேண்டும்’ என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசைதமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் எல்லா இடத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன், உள்நோக்கத்துடன் நடைபெறவில்லை, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும் அதை நான் கேட்டேன் அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள் அதனால் விட்டுவிட்டேன் என தெரிவித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

புதுச்சேரியிலும் உள்நோக்கத்தோடு இதே போல் ஒரு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு வருத்தத்திற்குரிய ஒன்று. தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை உரிய பரிசோதனைக்கு பிறகு வழங்கப்பட வேண்டும்’ என கூறினார்.தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து பேசியவர், வன்முறை இல்லாத அமைதியான சூழல்தான் இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ‘தமிழ்நாட்டில் கலாச்சாரத்தை மாற்றும் சூழல் பெருகி வருகிறது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதிக கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதன் அடையாளங்களை யாரும் மாற்ற வேண்டாம். கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பட்டு அவரவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் கடனுதவி திட்டங்களில் பழங்குடியினருக்கும் பட்டியலினத்தவருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆடைகளை குறைப்பது அறிவாற்றல் ஆகாது. அறிவை வளர்ப்பது தான் அறிவாற்றல் ஆகும் என மாணவிகளிடம் பேசியுள்ளேன்.மாடனாக இருக்கலாம் வெஸ்டனாக இருக்க வேண்டாம் வெஸ்டர் ஆடைகளை அணிவது எதிரானது என தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ் என்பது தேசியவாத அமைப்பு. புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ்ஸின் பேரணி அமைதியாக நடந்தது. அதே நேரத்தில் மனித சங்கிலியும் அமைதியாக நடந்தது. கேரள மாநிலத்திலும் இதே போல் நடந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் இதை ஏன் பரபரப்பாக்குகிறார்கள் என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் பறந்து பட்ட எண்ணத்தோடு செயல்பட வேண்டும்’ என தெரிவித்தார்.அவரது தந்தை தனியாக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அவரை பார்த்துக்கொள்ள தயாராக இருந்த போதும், சுய விருப்பத்தால் அவர் தனியாக இருப்பதாக கூறினார். மேலும் தெலுங்கானாவில் தெலுங்கு கேட்க முடியவில்லை என வந்துவிட்டார். அவர் தனியாக இருக்க வேண்டும் என்று விரும்பி வீடு வாங்கிய போது எனக்கு அதிர்ச்சி தகவலாக தான் இருந்தது என தெரிவித்தார்.மேலும் கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை, பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும் நான் மட்டும்தான் தமிழ்நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks