கோவை தொண்டாமுத்தூர் அடுத்த செலம்பநல்லூர் பகுதியில் சுமார் 8 அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், நரசிபுரம், தேவராயபுரம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கிருந்து தினமும் பள்ளி, கல்லூரி, மற்றும் வியாபாரம், பணிக்கு கோவைக்கு செல்வோர் இந்த பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
காலையில் அப்பகுதியில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு மேல் சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும், சில நேரங்களில் நடந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போக்குவரத்து மண்டல மேலாளரிடம் பல முறை பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தொண்டாமுத்தூர் செலமநல்லூர் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து அங்கு பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் முறையான அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
Be First to Comment