கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘டெல்லியில் அமலாக்க துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர். இதற்காக டெல்லி ஸ்தம்பிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் டெல்லி மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதற்காக காங்கிரஸ் கட்சி சட்டத்தை கையில் எடுத்து கொண்டு தவறு செய்யாதவர்களை போல நடிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், ‘மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என யார் கொண்டு வந்தாலும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும். அதற்கு பா.ஜ.க துணை நிற்கும். அனைத்து கட்சி கூட்டத்திலும் பா.ஜ.க இதை தெளிவுபடுத்தி இருக்கின்றது.
மேகதாதுவிற்கு குறுக்கே அணை கட்டுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேகதாதுவில் மூன்று மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் கருத்தை தமிழக அரசு செயல்படுத்துகின்றது.’ என கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் விசாரணை மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாஜக அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ‘எங்களுக்கு அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை கிடையாது. பா.ஜ.கவை வளர்க்க நாங்கள் பாடுபடுகின்றோம்.
கருத்தியல் அடிப்படையில் தமிழக அரசியல் நகர்கின்றது. முக்கியமான கட்சிகள் ஒரு பாதையில் இருக்கின்றன. நாங்கள் கருத்தியல் அடிப்படையில் செயல்படுகின்றோம். எல்லா விவகாரங்களிலும் பா.ஜ.க வின் கருத்து வித்தியாசமாக இருக்கின்றது. திமுகதான் எங்களை செயல்பட வைக்கின்றது.
அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பா.ஜ.கவும் தங்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைப்பதிலும் தவறில்லை.’ என அண்ணாமலை தெரிவித்தார்.

மேகதாதுவில் மூன்று மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது – அண்ணாமலை
by
Tags:
Leave a Reply