மேட்டுப்பாளையம் கல்லாறு ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் பெரியபாண்டி மகன் ராஜ்குமார் (39). நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து,பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.இந்த எருமைகள் மீது,யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர்.இதனால் 25 க்கும் மேற்பட்ட எருமைகளுக்கு புண் ஏற்பட்டு காயம் அடைந்துள்ளன.

இது குறித்து விவசாயி ராஜ்குமார் கூறுகையில், எருமை பண்ணை அமைத்து,பால் வியாபாரம் செய்து வருகிறேன்.கல்லாறு புளியமரம் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோர பகுதியில் எருமைகளை மேய விடுவது வழக்கம்.கடந்த நான்கு நாட்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்று வந்த பல எருமைகள் மீது கொப்பளங்கள் வந்தன.மூன்றாவது நாளில் புண்ணாக மாறி அதிலிருந்து சீல் வடிந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார்,கால்நடை மருத்துவர் தியாகராஜனை வரவழைத்து பரிசோதனை செய்தபோது,எருமைகள் மீது ஆசீட் ஊற்றி இருப்பது தெரியவந்தது. இதில் பாதித்த,பால் கறக்கும் எருமைகள் சினையாக உள்ளது.

கன்று போடும் நிலையில் உள்ள எருமைகள், சரியாக தீவனம் சாப்பிடாமல் உடலில் காயங்களுடன் உள்ளன.தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ராஜ்குமார் முடிவு செய்துள்ளார்.மேலும் புளுகிராஸ் மற்றும் மாவட்ட கால் நடை நிர்வாகம் பண்ணைக்கு மருத்துவ குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்ட அனைத்து எருமைகளுக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Be First to Comment