உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வனத்துறை சார்பில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து பேரணி நடைபெற்றது. வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், லாலிரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி (எஸ்.என்.எஸ் கல்லூரி, ரத்தினம் கல்லூரி, சிந்தி வித்யாலயா பள்ளி) மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்தும், யானைகள் குறித்த பதாகைகள், யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், யானைகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேரும் வகையிலும், யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெரியபடுத்தும் வகையிலும் இந்நாள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். யானைகள் இருந்தால் வனமும் வளமாக இருக்கும் என தெரிவித்தார். சமீப காலத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

இயற்கையாக இல்லாமல் யானைகள் உயிரிழந்திருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கவும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். யானைகள் ரயில்களில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அதனை தடுக்க ரயில்வே துறையும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக தெரிவித்தார். மேலும் ரயில் பாதையில் யானைகள் நடமாடும் இடத்தில், மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Be First to Comment