கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களை மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணி செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தக்கூடிய கேமராக்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் வருவோர் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவது அல்லது போலீசார் பொதுமக்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த கேமராக்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 36 காவல் நிலையங்களுக்கும் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தக்கூடிய கேமராக்களை வழங்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன் முதல்கட்டமாக 15 காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு இந்த கேமராக்களை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் வழங்கினார்.
இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும் துல்லியமாக வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் என்பதால் ரோந்து செல்லும் காவலர்கள் இதை பயன்படுத்த மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது அதை வீடியோ ஆதாரமாக பதிவு செய்ய முடியும் மேலும் காவலர்களும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும் முதல் கட்டமாக 15 கேமராக்கள் வழங்கப்பட்ட நிலையில் விரைவில் கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment