செல்போனை பார்த்து சிரித்தப்படி வந்த குறிச்சியார், மழையில் லேசாக நனைந்திருந்தார். ‘‘சூடு தணிந்தது’’ மாமன்ற பொறுப்புகள், வானிலை இரண்டையும் குறித்து சிலேடையாகச் சொன்னார்.
”நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் செல்போனில் பேசிக் கொண்டும், வீடியோ காலில் பார்த்துக் கொண்டும் இருந்ததுதான் தற்போது கோவை முழுக்க பேச்சாக இருக்கிறது.” அந்த வீடியோவை அ.தி.மு.க ”ஐ.டி” விங்க் அதிகம் பேருக்கு பரவு செய்து தி.மு.க கவுன்சிலர்களின் செயலை சிரிக்கும்படி செய்துள்ளனர்.
ஆனால்…
‘‘என்ன ஆனால்..?”
அதில் ஒரு கவுன்சிலர், ”தான் உறவினர்களுடன் பேசவில்லை, ”தன் வார்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நேரலையில் தண்ணீர் பிரச்சனையை பற்றி கூறினார். அதனை வீடியோ காலில் தவிர்க்க முடியாமல் பார்க்க வேண்டியதாகி விட்டது” என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளாராம்.
”ஓ”
”அதே போல்தான், சில நாட்களுக்கு முன் குறிச்சியில் நடைபெற்ற ஆடவர் கால்பந்தாட்ட நிகழ்ச்சியிலும் சில சங்கடங்கள் தி.மு.க கட்சியினருக்குள் ஏற்பட்டு விளக்கம் கொடுத்து சமாதானம் செய்யப்பட்டதாம்.”
”என்னவாம்?”
குறிச்சியில் செங்கோட்டையா உயர்நிலைப்பள்ளியில் தி.மு.க சார்பில் ஆடவர் கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை மேயர் மற்றும் தெற்கு மண்டல தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களின் பெயர்களை மைக்கில் கூறும் போது ஒரு மாமன்ற உறுப்பினர் பெயரை கூறவில்லையாம். இதனால் கோபமடைந்த அவர் விழா நடக்கும் போதே அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் ஓடி சென்று அவரை சமாதானம் செய்து மீண்டும் விழா மேடைக்கு அழைத்து வந்து பரிசுகள் கொடுக்கும்படி மன்றாடி கேட்டு கொண்டனராம்.
”அவ்வளவு கோபமா?”
ஆமாம், குறிச்சி தி.மு.கவில் ஒரு சிலர் அதிகாரத்திற்கும், பொறுப்புக்கும் வருவதற்கு அவர்தானே காரணம். அப்படிப்பட்ட தன் பெயரை தேர்தல் முடிந்ததும் எதிரணியில் இருந்து தங்களுடன் ஒட்டிக் கொண்ட ”மைக்” புகழ் வேண்டுமென்றே கூறாமல் தவிர்க்கிறார் என நினைத்ததால்தான் அந்த கோபமாம். ஆனால் பேசியது ”மைக்” புகழ் இல்லையாம். மைக்கில் பேசிய நபர் வேறொருவராம். உண்மையாகவே தெரியாமல் நடந்து விட்டது என கூறி விளக்கம் கொடுக்கப்பட்டதற்கு பின்பே அவர் சமாதானம் ஆனார்.
இந்நிலையில் ”கவுன்சிலர் பொறுப்புதான் கிடைக்கவில்லை ஒருங்கிணைந்த வார்டு பொறுப்பு வாங்கி விடலாம்” என்று நினைத்து பணியாற்றி வரும் ”மை”க்கிற்கு விழா மேடையிலேயே செக் வைத்தாராம் மாமன்ற உறுப்பினர்.
”அது என்ன?”
விழா முடிந்து அவர் செல்கையில் இனி இந்த வார்டில் ஒருங்கிணைந்த பொறுப்பிற்கு வர கூடியவர் ”சக்தி”மயமானவர்தான் என்று அனைவர் முன்னிலையிலும் சொன்னாராம் மாமன்றம். இதனால் வார்டு பொறுப்பும் ”கனா” கண்டது போல் ”கானல்நீராகி” விடுமோ என்று வேதனையில் உள்ளாராம் ”மைக்”
”பாவம்”
குறிச்சியில் ரிசர்வ் சைட்களை ஆக்கிரமித்து அந்த இடத்தை வாடகைக்கு விட்டு மாதம் மாதம் வசூல் செய்யும் பலே கில்லாடி பற்றி சொல்கிறேன். எல்.ஐ.சி காலனியில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் இருக்கிறது பழமுதிர்நிலையம். அந்த பகுதியின் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பழமுதிர்நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே இருக்கும் வீட்டின் ”செல்வ”மான நபர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி கடைக்காரரிடம் மாதம் மாதம் வாடகை வாங்கி வருகிறாராம். இதுமட்டுமின்றி கடை முன் பார்க்கிங் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றும், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்துவதால் எங்களுக்கு மாதம் மாதம் மாமுல் பணம் தர வேண்டும் என சென்ற ஆட்சியில் வசூல் செய்தனராம் அரசியல் புள்ளிகள் சிலர்.
”ம்”
தற்போது பழமுதிர்நிலையம் மாதம் மாதம் தரும் மாமுல் பணம் எனக்குதான் வரவேண்டும் என மல்லு கட்டுகிறார்களாம் ஆளும் தரப்பினர் இருவர். ஒற்றுமையாக இருந்து பணத்தை பெற்றுக் பிரித்து கொள்ளலாம். நமக்குள் ஒற்றுமை தேவை என மூன்றாவதாக ஒருவர் சமரசம் பேசுகிறாராம்.
”அடடே”
”இதென்ன பிரமாதம்” என வடிவேல் சொல்வதை போல இன்னுமொரு தகவல் சொல்கிறேன், தேர்தலில் அமோக வெற்றி பெற்றும் இன்னும் எந்தவித வருமானமும் பார்க்க முடியவில்லையே என மிகுந்த மனவேதனையில் இருக்கிறாராம் ஒரு மாமன்ற உறுப்பினர். இதனால் அவருக்கு ஆலோசனை தரும் நபர் எடுத்த முடிவுதான் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். சென்ற அ.தி.மு.க ஆட்சியில் கட்சி நிதியாக யாரெல்லாம் உங்களுக்கு உதவினார்கள் என்று சொல்லுங்கள். இந்த ஐந்து வருடமும் அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கும் 25 % கொடுத்து விடுகிறேன் என நமக்குள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்” என மாமன்ற உறுப்பினர் சார்பில் பேசியுள்ளராம் அந்த ஆலோசகர்.
”பலே”
”எப்படியோ பதவிக்கு வந்தது சம்பாதிக்கதான் என்ற மனநிலையில்தான் உள்ளனர் அரசியல்வாதிகள்” என்றபடி கிளம்பினார் குறிச்சியார்.

வசூல்…வசூல்…வசூல்…
More from மிஸ்டர் குறிச்சிMore posts in மிஸ்டர் குறிச்சி »
Be First to Comment