முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்ததையடுத்து இந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்கியது.

முன்னதாக அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு ஆறுமுக சாமி ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான ஓபிஎஸிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தகவல்களை சேகரித்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம், பல கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்ற ஒரே பதிலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தனது உதவியாளர் மூலம் மட்டுமே தனக்கு தெரியவந்தது என்று கூறிய அவர், சிகிச்சை முறைகள் பற்றி அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் தனக்கு தெரியவந்தது என்றும் கூறினார். ஓ.பன்னீர் செல்வத்திடம் எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் ஒரே பதிலை கூறி வருவதால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் எப்போது யாரால் விலகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Be First to Comment