மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாடங்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், இன்று மாவட்ட தலை நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவையில் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், வரிகளை குறைக்க வேண்டும் என்றும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து இந்திய தேசிய மாதர் சம்மேளன கோவை மாவட்ட கன்வீனர் சாந்தி சந்திரன் கூறுகையில், “தினமும் 300 ரூபாய்க்கும் கீழ் ஊதியம் பெற்று சாமானிய மக்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சொத்துவரி, பால் விலை மற்றும் மின்சார கட்டணம் உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தமிழக முதலமைச்சர் தாயுள்ளம் கொண்டு, வரிகளைக் குறைத்து, விலையேற்றத்தைத் திரும்பப்பெற வேண்டும்.” என்றார்.
Be First to Comment