தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதிலால் ம.தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த பா.ஜ.கவில் இணைந்த சூர்யா சிவா, தி.மு.க எனும் கட்சி ஒரே குடும்பத்தின் பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.கவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போவதாகத் தெரிவித்தார். தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா எம்.பியின் மகன் திடீரென பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனின் தந்தையின் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். தி.மு.க தேம்ஸ் நதி போல, யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 ஆண்டுகள் கடந்து தி.மு.க போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் போகும் எனப் பதிலளித்தார்.
இந்த பேச்சு ம.தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிருப்திதை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment