வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு.
ஹோட்டல் அதிபர் வீட்டில் கைவரிசை.
கோவையில் இன்று அதிகாலை ஓட்டல் அதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சரவணம்பட்டி, திருமுருகன் நகர், பகுதியில் வசிப்பவர் தங்கவேல் அவருடைய மகன் அருண் குமார் ( 38), இவர் சரவணம்பட்டியில் கடந்த சில மாதங்கள் முன்பு மதுரை பாய்ஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் ஓட்டல் தொழில் நலிவடைந்தது. அதை அடுத்து சேலம் பகுதிக்கு வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டுப் பக்கமாக சென்ற நபர்கள் அவரின் வீட்டின் பின்புறம் பூட்டு உடைக்கப்பட்டு வீடு அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தவர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் சின்னராசு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த கொள்ளை சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Be First to Comment