பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வரும் சின்னப்பன் மனைவி 60 வயதான சின்னமணி என்ற மூதாட்டி, இன்று காலை தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் உள்ள ஸ்விட்ச் போர்டை ஆன் செய்ய சென்றுள்ளார். அப்பொழுது கால் தவறி 60 அடி கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் எழுப்பி உள்ளார். சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்த இரண்டு இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து மூதாட்டியை மீட்டு கிணற்றில் இருந்த கயிற்றைப் பிடித்து நீந்தி மேலே வர முடியாமல் நீண்ட நேரமாக தவித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி மற்றும் காப்பாற்ற சென்ற இரு இளைஞர்களையும், தீயணைப்பு படை வீரர் நாட்டுச்சாமி கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment